ருத்தித் துறை, இலங்கை

லங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு அவர்கள் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று நாகை மாவட்டம் அக்கரை பேட்டையைச் சேர்ந்த அமிர்தலிங்கத்துக்குச் சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.  இதைப்போல் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 பேர் சென்றனர்.  இந்த 21 பேரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் 21 பேரையும் இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.  மேலும் இந்த இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  இது தொடர்பான வழக்கு நேற்று 2 ஆம் முறையாக இலங்கை பருத்தித் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   மீனவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன் மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்னும் நிபந்தனையுடன் 21 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.  மீனவர்களின் விசைப்படகுகள், வலைகள், உபகரணங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும் அவர் உத்தரவிட்டார்.  

மீனவர்கள் படகுகளுடன் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்த்த தமிழக மீனவர்களுக்கு இது ஏமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.