இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதுடன் அனைத்து பொருட்களும் ரேஷனில் அளவாக வழங்கப்பட்டு வருகிறது.

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 285 க்கு சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்த பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடும் நிதி மற்றும் மூல பொருட்கள் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன.

நாளிதழ் மற்றும் செய்திதாள் அச்சகங்களுக்குத் தேவையான பேப்பர், பிரின்டிங் பிளேட், இங்க் போன்ற பொருட்கள் நார்வே, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் தற்போது அதற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, தி ஐலேண்ட் நாளிதழ் சனிக்கிழமை பதிப்பை நிறுத்தப்போவதாக நேற்று தனது முதல் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

1981 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாளிதழ் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது பதிப்பை நிறுத்தி இருக்கிறது.

காகித தட்டுப்பாடு காரணமாக செய்தி தாள்களின் பக்கங்களை குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது. விளம்பரங்களை நம்பியே அனைத்து செய்தி நிறுவனங்களும் இயங்கி வருவதால், பக்கங்களைக் குறைப்பதன் மூலம், கிடைக்கும் விளம்பர வருவாயில் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளதால் செய்தி நிறுவனங்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

ஏற்கனவே, காகித தட்டுப்பாடு காரணமாக கேள்வித் தாள் மற்றும் வினாத் தாள் அச்சிட முடியாமல் மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது கல்வித் துறை. தவிர, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்த சூழலில் கூட மக்கள் இதுபோன்ற ஒரு பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைச் சந்திக்காத நிலையில், தற்போதுள்ள சூழலில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களர்களும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.