கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகிய நாளான மே 9ந்தேதி நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மகிந்த ராஜபக்சேவிடம் இலங்கை காவல்துறையினர் சுமார் 5மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என கூறியதுடன், அவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மக்கள் கடந்த ஒரு மாதத்தக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமான நிலையில், கடந்த மே 9-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதனால் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மே 9-ந் தேதியன்று மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக இல்லம், பெற்றோர் கல்லறை, ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் வீடு, உள்ளூராட்சி நிர்வாகிகள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என 100க்கும் மேற்பட்ட சொத்துகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. இந்த மோதலில் ராஜபக்சே ஆதரவு எம்.பி ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார். மேலும் மே 9-ந் தேதி வன்முறைகள் தொடர்பாக 1,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர், குடும்பத்தோடு, தப்பி ஓடியதுடன், பல நாடுகளுக்கு சென்று மறைந்து வாழ்த்து வருகின்றனர். ராஜபக்சேவும், கடற்படை பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். அவரது தலைமையில் அனைத்து கட்சி அமைச்சரவை பதவியேற்றுள்ளது. அதையடுத்து, அதிரடி நடவடிக்கையாக மகிந்த ராஜபக்சேவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீசார் இன்று 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது, “இலங்கையின் தற்போதைய நிலைமை மாறணும்னா நானே மந்திரி ஆகணும்” என காவல்துறையினரிடம் ராஜபக்சே கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மீதான ஊழல் முறைகேடு வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.