கொழும்பு: இலங்கையில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இலங்கையின் 9 வது ஜனாதிபதியை (அதிபர்) தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளையதினம் (21) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதனால், ஜனாதிபதி பதவியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இலங்கை மட்டுமின்றி உலக நாடகளிடையேயும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பி வைத்து வரும் இலங்கை தேர்தல் ஆணையம், “ வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நீங்கள் நல்ல உறவில் செயல்பட வேண்டும் என வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தல், சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலில் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும்.” என்றும் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல், வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாக்கியுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக நாடு முழுவதும், 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission ) தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (20) கூடுதல் தொலைதூர சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.