கொழும்பு: இன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுள்ளார். 134 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதால், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எழுந்த மக்கள் போராட்டம் காரணமாக, இலங்கை அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச நாட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, இலங்கையின், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். ஆனால், அவரை ஏற்க பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து புதிய அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றம் 225 இடங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் ஒருவரை அதிபராக தோ்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. அதிபர் பதவிக்கான போட்டியில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் களத்தில் குதித்தனர்.
அதைத்தொடர்ந்து, இன்று காலைமுதல் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், 223 பேர் வாக்களித்த நிலையில், 134 வாக்குகள் பெற்று ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுள்ளார். இதனால், அவர் புதிய அதிபராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் புதிய அதிபராகத் தேர்வுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். ?
மேலும் மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.