காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  புதுச்சேரி  காரைக்கால்  பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மீனவர்கள் அவ்வப்போது  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக  இரு நாடுகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் பிடிவாதம் காரணமாக,  முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இந்த நிலையில, புதுச்சேரி, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இந்த மீனவர்கள்,  காரைநகர் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.  கைதான மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]