ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேரை இலங்கை ராணுவம் சிறைபிடித்துள்ளது. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து இலங்கை அழைத்துச் சென்றுள்ளனது.
தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 7 மீனவர்களை இன்று கைது செய்துள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே உள்ள கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.