கொழும்பு:

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றலா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பல்வேறு வகையான பிசிஆர் சோதனைகள் செய்வது மட்டுமின்றி, அவர்கள் விசாவை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அப்போது ஒரே கட்டணமாக 100 டாலர் மற்றும் குறைந்தது ஐந்து இரவுகள் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களில் தங்க, தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை சுற்றுலா துறை தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவிக்கையில், இலங்கை சுற்றுலா துறை, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு உயர்தரம் கொண்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்க உள்ளது. இதனால், இலங்கையில் உள்ள சுற்றுலா தளங்களை அவர்கள் கொரோனா பயமின்றி, ரசிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, சர்வதேச சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு முன்னேற்பாட்டை செய்து வருகிறது. இந்த ஆணையங்கள், உலகளாவிய ஆரோக்கிய பரிந்துரைகளை சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மற்றும் ரத்மலானா சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டாவின் மட்டால ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அனைத்து நாடுகளிலிருந்தும் சர்வதேச பயணிகளுக்காகத் திறக்கப்படும் என்று பெர்னாண்டோ தெரிவித்தார். இருப்பினும், விசாகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் சோதனையில் கொரோனா இல்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுமட்டுமின்றி ஐந்து நாட்கள் இரவில் தங்க அதற்குண்டான சர்டிபிகேட்டை வைத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் சொந்த நாடு திரும்புவதற்கான டிக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும். பயண இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் விசா கட்டணமாக 100 டாலர் செலுத்த வேண்டிய அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மே 20-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.