கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார்.
இலங்கைரய ராஜபக்சே குடும்பத்தினரே ஆண்டு வருகின்றனர். மகிந்த ராஜபக்சே பிரதமராகவும், கோத்தபய ராஜபக்சே நாட்டின் அதிபராகவும் உள்ளதுடன் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் அமைச்சர்களாக இருந்து வந்தனர். ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான நிர்வாகத்தால், இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன், வரலாறு காணாத அளவில் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ராஜபக்சே அரசாங்கத்தின் பிழையான நிர்வாகம், ஊழல், மோசடிகள் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக வேண்டும் என பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக அரசுக்கும் ராஜபக்சேக்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். அரச தலைவர், பிரதமர் உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வீடுகள் முன்பும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ராஜபக்சே பதவி விலக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் 11 கட்சிகளின் தலைவர்களுடன் இன்று அதிகபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினர். அப்போது அவேரிடம் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், ராஜபக்சே பதவியை விட்டு செல்வதே அன்றி வேறில்லை என்ற நிபந்தனையுடன் போராடுகின்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காது தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முயற்சிகளை எடுத்து வருவது மேலும் இந் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இதன் பாதிப்புகளை கருத்திற் கொண்டு அரச தலைவர், பிரதமர் உட்பட அனைவரும் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும் கோத்தபய ராஜபக்சே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.
மேலும், சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.