கொழும்பு:

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, இலங்கை பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ, சஸ்பெண்ட் ஆன காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில், 11 இந்தியர்கள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.

500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு பெண் உட்பட 9 தீவிரவாதிகள் தங்கள் உடலில் குண்டுகளை கட்டியவாறு இந்த தற்கொலை தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ். அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் உள்ளூர் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது.

இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தமிழ் வழி ஆசிரியர்,பள்ளி முதல்வர் உட்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாத தாக்குதல் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தும், பாதுகாப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள தவறியதாக, அந்நாட்டின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரவை பணியிடை நீக்கம் செய்தும், பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமஸ்ரீயை பணியிடை நீக்கம் செய்தும் அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார்.

தங்களது பணியை செய்ய தவறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹேமஸ்ரீ மற்றும் புஜித் ஜெயசுந்தராவை இலங்கை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.