நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு! இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Must read

டில்லி:

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த உத்தரவிட வேண்டும் உச்சநீதி மன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், இது தொடர்பாக நாளை விசாரிக்க முடியுமா என்பது குறித்து பார்க்கலாம் என்று அறிவித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 15 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில், முதல்வர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்களான நாகேஷ், சங்கர் ஆகியோர், உச்சநீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தகி மனுவை தாக்கல் செய்தார். மனுவில்,  கர்நாடக சட்டமன்றத்தில் இன்று கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்தும் வகையில், பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்றே விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று முகுல்ரோத்தகி வலியுறுத்தினார். ஆனால், வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உறுதியாக மறுத்தார்.

அதையடுத்து, நாளை விசாரிக்க முடியுமா என்று முகுல்ரோத்தகி மீண்டும் தலைமை நீதிபதியிடம் வேண்டினார், ஆனால், அது குறித்து நாளை பார்க்கலாம் என்று தலைமைநீதிபதி தெரிவித்து விட்டார்.

More articles

Latest article