டில்லி
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி வரும் ஜூன் மாத தொடக்கத்தி8ல் வெளியாகும் எனவும் அதன் விலை $10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 2 தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன கண்டு பிடிப்பான கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் கண்டுபிடிப்பான கோவாக்சின் ஆகியவை ஆகும்.
இதில் கோவிஷீல்ட் மருந்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மற்றும் கோவாக்சின் மருந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. சமீபத்தில் ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து இந்தியாவில் டாக்டர் ரெட்டி லாபரடரீஸ் உற்பத்தி செய்கிறது. டாக்டர் ரெட்டி லாபரடரீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி மே மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும். அதன் விலை டோஸ் ஒன்றுக்கு $10 விலை என இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவன இயக்குநர் ஜி வி பிரசாத், “இந்தியாவில் 18 வயதை தாண்டிய அனைவருக்கும் மே மாதம் 1 முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதை வரவேற்கிறேன். கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் நாங்கள் முனைந்துள்ளோம். ரஷ்யா இங்கிருந்து தனது மருந்துகளை ஏற்றுமதி செய்யப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.