மாஸ்கோ: ரஷ்யா தயாரித்து நடைமுறைப்படுத்தியுள்ள ‘ஸ்புட்னிக் V’ என்ற தடுப்பு மருந்தின் வெற்றியானது, ரஷ்யாவுக்கு உலகளவில் கிடைத்த அறிவியல் மற்றும் அரசியல் வெற்றியாக கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில், உலகளவில் பயன்பாட்டிலுள்ள தடுப்பு மருந்துகளில், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் V’ தடுப்பு மருந்தே, அதிக தாக்கம் வாய்ந்த ஒன்றாக விஞ்ஞானிகளால் மதிப்பிடப்படுகிறது.
கொரோனா பாதிப்பு உலகளவில் உணரப்பட்ட சில வாரங்களிலேயே, அதற்கான சிறந்த தடுப்பு மருந்தை வேகமாக தயாரிக்கும்படி ஆணையிட்டார் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின்.
அந்நாட்டு அரசின் ஆராய்ச்சி நிறுவனமான கமாலியா ஆய்வு மையத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் கிண்ட்ஸ்பர்க், ‘ஸ்புட்னிக் V’ தடுப்பு மருந்தை, முதற்கட்ட சோதனைக்காக தன் உடலிலேயே செலுத்திக் கொண்டார். ஆனால், அதன்பிறகு, அதிபர் புடினின் மகளே, அந்த தடுப்பு மருந்தை உட்செலுத்திக் கொண்டார். அதன்மூலம், அதிகளவிலான மக்களைக் கவர முடிந்தது.
பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியிலேயே, தன் நாட்டின் தடுப்பு மருந்திற்கு, உலகிலேயே முதன்முதலாக அனுமதியளித்தார் புடின். கடந்தாண்டு டிசம்பரில், ரஷ்யாவெங்கும் அமலுக்கு வந்தது ‘ஸ்புட்னிக் V’ தடுப்பு மருந்து.
ஆனால், அந்த சமயத்தில், அமெரிக்காவும் ஐரோப்பாவும், தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரஷ்யாவின் இந்த வெற்றியானது, அதன் அறிவியல் மற்றும் அரசியல் வெற்றியாக, நவீனகால உலக வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1957ம் ஆண்டு, அமெரிக்காவை முந்திக்கொண்டு, ‘ஸ்புட்னிக் V’ என்ற பெயரில் உலகின் முதல் செயற்கைக்கோளை ரஷ்யா ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.