சென்னை: பள்ளியில்  மோட்டிவேசனல் பேச்சு (தன்னம்பிக்கை பேச்சு) என்ற பெயரில் ஆன்மிகம் பேசியதாக தமிழக அரசால் கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர்  மகா விஷ்ணுவுக்கு சுமார் ஒரு மாதம் கழித்து, சென்னை  அமர்வு நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போராட்டம் நடத்துவோம் என மிரட்டியதால், மாற்றப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கே மாற்றப்பட்டனர். இதனால் இந்த விஷயத்தில் அரசியல் சதி நடைபெற்றது தெரிய வந்தது. இந்த நிலையில், தற்போது நீதிமன்றம்  மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனமான மகாவிஷ்ணு,  சென்னையில் 2 அரசுப்பள்ளிகளில்  இந்து மத சம்பந்தமாக, கர்மா குறித்து பேசியது சர்ச்சையாக்கப்பட்ட நிலையிலும், அவரிடம் வாக்குவாதம் செய்த மாற்றுத் திறனாளி ஆசிரியர் தரப்பிலும் புகார்கள் கொடுத்த நிலையில், அவரை தமிழ்நாடு அரசு கைது செய்தது நடவடிக்கை எடுத்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய  மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த போலீஸார், அவர் மீது மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 192, 196 (1) a, 352, 353 (2) மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 92 (a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்-

சிறையில் அடைக்கப்பட்ட மகா விஷ்ணு  ஜாமின் கோர மருத்து வந்த நிலையில், தான் எந்த  வகையிலும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேச வில்லை என்றும், தனது பேச்சு திரிக்கப்பட்டதாகவும் முழு உரையைக் கேட்காமல் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் மகா விஷ்ணு கூறி இருந்தார்.  . அதுதொடர்பான வீடியோக்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து காவல்துறையினர் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையடுத்து ஜாமின் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

. கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே மாறுதல்! காரணம் என்ன?