ஜெய்ப்பூர்
மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழை இருந்ததால் ஜெய்ப்பூர் அரசு பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் அமைந்த அந்த கேள்வித்தாளில் எழுத்துப் பிழைகள் மிகுந்து காணப்பட்டுள்ளன. இதனால் பல மாணவர்களுக்கு அது புரியாமல் போனது. இது மாணவர்களிடையே பரபரப்பை உண்டக்கியது.
அதில் மோடியைப் பற்றி ஒரு செய்தி அளிக்கப்பட்டு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த செய்தியில் எழுத்துப் பிழைகள் மிகுந்து காணப்பட்டது. உதராணத்துக்கு மோடியைக் காண மக்கள் திரள்வார்கள் என்னும் கருத்தில் Crowd puller என்பதற்கு பதில் croad puller என காணப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி speaker என்பதற்கு பதில் spoker என இருந்தது. அதே போல savvy political leader என்பது sovy என குறிப்பிடப் பட்டிருந்தது. Gujarat என்பதை Gujrat எனவும் ஒரு கேள்வியே எழுத்துப் பிழையால் அர்த்தமற்றதாகவும் ஆகி உள்ளது.
இது குறித்து விசாரித்த மாவட்ட கல்வி அதிகாரி ரத்தன் சிங் இந்த கேள்விகளை தயாரித்து மற்றும் அச்சடித்த பின்பு சோதனை செய்த இரு ஆசிரியைகளான சரிதா யாதவ் மற்றும் ரித்து பார்கவ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். அது மட்டுமின்றி இது போல எழுத்துப் பிழையுடன் கேள்வித் தாளை அச்சடித்த அச்சகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.