4.6.20  –  வைகாசி விசாகம் ஸ்பெஷல் !

வைகாசி விசாகமும் முருகப் பெருமானும் …..

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் தோன்றினார். எனவே முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது.

சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும் முருகப் பெருமான் விசாகமாக (கீழ்க் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கிக் கூறுகிறது.

முருகன் அவதாரம்:

பத்மாசுரன் (சூரபத்மன்) என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற வரத்தினையும் பெற்றான்.

இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தலானான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். தேவர்கள் சிவபிரானிடம் சென்றபோது, அவர் தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார்.

அவருக்குப் பணிவிடை செய்யும் அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும் என்ற காரணத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழித்து தம்மைக் காப்பாற்றும்படி இரந்து வேண்டினர்.

தேவர்களின் குறை தீர்க்க எண்ணிய சிவபிரான்; பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அவனை அழிக்க தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கினார், அவற்றை வாயுபகவான் தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார்.

சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களை அவை அடைந்ததும் ஆறு மலர்களில் ஆறு குழந்தைகள் தோன்றின.

அவர்களை எடுத்து வளர்ப்பதற்காகப் பிரம்மா ஆறு கார்த்திகை பெண்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ஆறு குழந்தைகளையும் பாலூட்டி தாலாட்டி வளர்த்து வரும் காலத்தில் உமாதேவியார் சிவபிரான் சகிதம் அங்குச் சென்று அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைத்தபோது அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றிணைந்து ஓர் உடல் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுகனாகத் தோன்றினார் என்பது புராண வரலாறு.

கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் “கார்த்திகேயன்” எனவும், ஆறுமுகம் கொண்ட திருமுருகனாகத் தோன்றியதனால் “ஆறுமுகன்” எனவும் பெயர் பெற்றார்.

முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.

இந்த நன்னாளில் அவரை போற்றி துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெறுவோமாக .

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !