புதுடெல்லி:
ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த நாளை ராமநவமியாக நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் நவமி தினமே ஆண்டுதோறும் ராமநவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் அதிகாலையில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில், ராமநவமியையொட்டி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், கொடியை ஏற்றி வைத்தார். இதேபோன்று மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடலாவில் உள்ள ராமர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில், ராமநவமியையொட்டி பக்தகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோன்று, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ராமநவமியையொட்டி பக்தர்கள் நடனமாடி ஊர்வலமாக சென்றனர். அதேபோல, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.