சேலம்: சேலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில் 37,192 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.42 கோடி பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 54 தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் சேலம் மற்றும் அருகே உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 731 பேர் கலந்துகொண்டனர்.
இவர்களில் 124 பேரை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தனர். அவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது ரூ.20ஆயிரத்தில் துணிக்கடை ஒன்றில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் பணி ஆணையை பெற்றுக் கொண்டதுடன், அமைச்சரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில் 37,192 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.42 கோடி பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சுயவேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், வங்கிக்கடன் மானியமாக ரூ.25,000 வழங்கும் திட்டமும், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ. மாணவிகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசுத்துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கு உறுதி செய்யப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.