சென்னை

காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சைக்கிளில் செல்வோருக்காக கிழக்கு கடற்கரை சாலையில் தனி வழி பாதை ஏற்பாடு செய்துள்ளார்.

தினசரி ஏராளமானோர்  சென்னை அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். அவர்கள் பாதுகாப்பாகவும், வாகனங்களின் வேகத்தால் பயமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதற்காக பாதுகாப்பான வழி அமைப்பதற்கும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆணையிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூர பாதையில் தற்காலிகமாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்கு தனி பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அக்கறை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான தனி வழிப்பாதையில் சென்னை காவல்துறையினர் மற்றும்  பொதுமக்களுடன் சைக்கிள் பயணம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அப்போது முட்டுக்காடு முதல் அக்கறை வரையிலான இந்த வழித்தடத்தில் இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்த சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.  ஒவ்வொரு ஞாயிற்று  கிழமையும் காலை 5 மணி முதல் 8 மணி வரை  இனி அந்தப் பாதையில் சைக்கிள் பயணத்திற்கான தற்காலிக ஒரு வழி பாதை  அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]