பெங்களூரு: 
 
ரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது என்றும் டி.ஐ.ஜி.பி., ரூபா அறிக்கை அனுப்பி உள்ளார். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் அவர் அறிக்கை அனுப்பியதே டிஜிபி சத்யநாராயணாவுக்குத்தான்.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.பி.,யாக ரூபா, கடந்த மாதம் 23 ம் தேதி நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்றதுமே  சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இந்த மாதம், 10 ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார், ரூபா. அங்கு நடக்கும் பல மோசடிகளை, விவரமாக குறிப்பிட்டு சிறைத்துறை டிஜிபியான சத்யநாராயணாவுக்கு அனுப்பியிருக்கிறார். இதில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவது பற்றி குறிப்பிட்டுள்ள ரூபா,   “உங்களுக்கு (சத்யநாராயணாவுக்கு) சசிகலா 2  கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பேசப்படுகிறது” என்றும் வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறார்.
.சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு  ரூபா சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வி.கே. சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.  அவர் விரும்பும் உணவை தயார் செய்து கொடுப்பதற்காக  சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தாங்கள் அப்படி ஏதும் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை டி.ஐ . ஜி.,யான நான், ஆய்வு மேற்கொண்டதை, தங்களுக்கு அறிக்கையாக அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ரூபா.

இந்த அறிக்கை குறித்து நேற்று கன்னட  சேனல்களில்,  பரபரப்பாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ரூபாவிடம் கேட்டபோது, தான்  ஆய்வு செய்ததையும், அறிக்கை சமர்ப்பித்ததையும் உறுதிபடுத்தினார்.  மேலும், “இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஊழல் ஒழிப்பு படையிலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்” என்றும் தெரிவித்தார்.