இன்று பாரதியார் பிறந்த நாள் – 11/12/2020

இன்று மகாகவி பாரதியாரின் 139 ஆம்  பிறந்த தினத்தை ஒட்டிய சிறப்புப் பதிவு

பாரத நாட்டில் பல திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்த மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இன்று.   கடந்த 1882 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பிறந்த இவர் முண்டாசுக்கவிஞர் எனவும் அழைக்கப்படுகிறார்.  இவர் ஒரு கவிஞர் மட்டுமின்றி, எழுத்தாளர், பத்திரிகையாளர், விடுதலைப் போராட்ட வீரர், சமுக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.  இவரது இயற்பெயர் சுப்ரமணியன் ஆகும்.

மனைவியுடன் பாரதியார்

இவர் இளம் வயதிலேயே கவி பாடும் திறன் கொண்டவராக விளங்கினார்.  இவரது தாய் லட்சுமி அம்மாள் மற்றும் தந்தை சின்னசாமி ஐயர் ஆவார்கள்.  பாரதியார் என்னும் பட்டத்தை  இவருடைய சிறுவயதிலேயே எட்டயபுரம் அரசு சபை வழங்கியது.   1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்த பாரதியார் காசியில் படித்தவர் ஆவார்.  இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, வங்க மொழி எனப் பல மொழிகளையும் கற்றறிந்தவர் ஆவார்.

இவர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் மட்டுமின்றி மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல பணிகளை ஆற்றி உள்ளார்.   சுதேசமித்திரன் பத்திரிகையில் இவர் வரையும் கேலிச் சித்திரங்கள் அப்போது பிரபலமாக விளங்கியது.   இவ்வளவு புலமை இருந்தும் இவரை வறுமை வாட்டியது.

ஆயினும் சுதந்திர தாகம் மிகுந்து வ உ சியின் கப்பல் நிறுவனம் தொடங்க ஊர் ஊராய் சென்று வசூல் செய்தவர் மகாகவி பாரதியார் ஆவார்.   இவருடைய பாடல்கள் மக்களின் இடையே கடும் புரட்சியை உண்டாக்கி சுதந்திரப் போராட்டத்தின் பக்கம் அனைவரையும் ஈர்த்தது.   பிரிட்டிஷ் அரசு இவரை தீவிரவாதி என அறிவித்தது.

குடும்பத்துடன் பாரதியார்

பல மொழிகள் கற்றிருந்தாலும் தனது தாய் மொழியான தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டிருந்த பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் எனப் பாடி உள்ளார்.   அத்துடன் பெண்ணடிமையை போக்கத் தனது பாடல்கள் மூலம் குரல் எழுப்பிய உண்மையான பெண்ணடிமை எதிர்ப்பு புரட்சியாளராகவும் இவர் விளங்கினார்..

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த பாரதியார் தினமும் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உள்ளவர் ஆவார்.   அங்குள்ள கோவில் யானைக்குப் பழம் அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.  ஒரு நாள் அந்த யானை மதம் பிடித்து இவரைப் பிடித்து வீசி உள்ளது.   அதில் இருந்தே பாரதியார் உடல் நலம் குன்றத் தொடங்கியது.

இவரது பெருமையை மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம்.  அவ்வளவு நீளமாக இந்தப் பதிவு மாறும்.  ஆனால் அவரது ஆயுள் மிகவும் குறுகியதாக இருந்தது.   இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று வயிற்றுப் போக்கு காரணமாக உயிர் இழந்தார்.  இவருக்கு தங்கம்மாள், சகுந்தலா என இரு மகள்கள் இருந்தனர்.