வெட்கமே இல்லாத விவகாரம் இது.. (சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்)

போக்குவரத்து கழகத்தின் பேருந்து கட்டணங்களை அரசு ஒரு நாள் திடீரென உயர்த்தும்.. உயர்த்திய பிறகும் அண்டை மாநிலங்களை விட, தழிழகத்தில்தான் கட்டணம் குறைவே என ஒரு பட்டியலை தவறாமல் அரசு தரப்பு வெளியிடும்..

கட்டண உயர்வுக்கு டீசல், தொழிலாளர்களின் சம்பள உயர்வு, இலவச பஸ் பாஸ் போன்ற காரணங்களை பட்டியலிட்டு சொல்லிவிட்டு அப்படியே மறக்கவே மறக்காமல் முந்தைய ஆட்சியால்தான் எல்லா எழவுமே என்று சொல்லவேண்டும். ஆட்சியாளர்கள் சொல்லுவதற்கு முன்பே மீடியா ஆட்கள் ‘முந்தைய ஆட்சி மீது பழிபோடும் படல’த்தை ஸ்கிரிப்டில் தயார் படுத்தி வைத்திருப்பார்கள் என்பதே நிஜம்..

பொதுமக்கள் பொங்குவதைக்காட்டிலும் உடனே எதிர்க்கட்சிகள் பல மடங்கு  பொங்குவார்கள். அதிலும் முந்தைய ஆளுங்கட்சி வானத்துக்கும் பூமிக்கு எகிறி குதிக்கும்..யார் காரணம் என்று அது தனி டியூனில் எஸ்டிடி அதுதான் புள்ளிவிவரத்தோடு வரலாறு பாட ஆரம்பித்துவிடும்..

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரச்சினைகளுக்கெல்லாம் எவை எவை காரணம், அவற்றை எப்படி தீர்ப்பது என்பது பற்றி மட்டும்பேசவே மாட்டார்கள் என்பதுதான்.

ஒரெயொரு பேருந்து வைத்திருக்கும் தனியார், இரண்டு வருடத்திற்கொரு முறை பளபளவென புதிய பேருந்தை விடுகிறார்..கத்தைகத்தையாக சம்பாதிக்கிறார்..ஆனால் பல்லாயிரம் பேருந்துகளை வைத்திருக்கும் அரசு போக்குவரத்து கழகங்கள், இருபதாயிரம் கோடி ரூபாய்க்குமேல் கடனில் தவிக்கின்றன. காலம் காலமாக மக்கள் மனதில் கேள்விக்கணைகளோடு தொக்கி நிற்கின்ற ஆதங்கம் இது..

தனியார் பேருந்து இயக்கத்திற்கும் அரசு பேருந்து இயக்கத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலில் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்.

தனியார் பேருந்தை இயக்க 2 ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ஒரு செக்கிங் என ஐந்துபேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள்..அவர்களின் சம்பளம் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் அடங்கிவிடும். பராமரிப்பு பணியை வெளியாட்கள் செய்வதால் அது நிரந்தர பணியில் வராது. தினமும் 15 ஆயிரம் வசூலிக்கும் பேருந்து எல்லா செலவுகளும் போக தினமும் 5 ஆயிரத்தை என, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 18 லட்சரூபாயையாவது லாபமாக ஈட்டித்தரும்

ஆனால் அரசு பேருந்தை இயக்க, ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், நிர்வாகம் என ஒரு பேருந்துக்கு எட்டு ஊழியர்கள் தேவை.. இவர்களில் சம்பளமாக இருபதாயிரம் வாங்குபவர்களும் உண்டு. முப்பதாண்டு அனுபவத்தால் 50 ஆயிரம் 60 ஆயிரம் வாங்குபவர்களும் உண்டு..அந்த வகையில் இவர்களின் ஒரு பேருந்துக்கான மொத்த மாத சம்பளம் மூன்று லட்ச ரூபாயை எட்டும்..15 ஆயிரம் வசூலாகும் பேருந்தில், அதாவது தினமும் பத்தாயிரம் ரூபாயை இவர்களுக்கு எடுத்துவைத்தாக வேண்டும்.. அப்புறம் டீசலுக்கு ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரை…

இதன்பிறகு பேருந்து பராமரிப்பு செலவுக்கு கணிசமான தொகையை செலவிடவேண்டும். இங்கே பொருட்கள் கொள்முதல் போன்றவற்றில் மேலிட வர்க்கத்தின் ஊழல் புகுந்து விளையாடும்போது தொழிலாளர்களுக்காக செலவாகும் தொகையில் பாதி அளவுக்கு சுருட்டிக்கொண்டுபோய்விடும்.

ஒவ்வொரு பேருந்தும் தினமும் சில ஆயிரங்களை நஷ்டத்தை ஏற்படுத்தி இப்படித்தான் 22 ஆயிரம் பேருந்துகளை இயக்கும் அரசுக்கு ஆண்டுக்கு சில ஆயிரம் கோடியை நஷ்டம் வந்து சேர்கிறது..

பேருந்து சேவையை பொறுத்தவரை, தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம், லாபம் அள்ளித்தரும் வழித்தடங்களிலும் நேரங்களிலும் மட்டுமே பேருந்துகளை இயக்குகிற தனியாரையும், படிப்படியான உயர்வுடன் தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ்..ஓய்வூதியம் அளிக்கும் அரசையும் ஒப்பிடுவதே தவறு..

பளபளா விஷயங்களை மேலோட்டமாக பார்த்து வியந்துபோகும் படித்த மாநகர வாசிகளுக்கு, கிராமப்புற சேவை பற்றி எந்த அளவுக்கு அத்துப்படி என்று புரியவில்லை. இன்றைக்கு நாட்டிலேயே, கிராமங்களுக்கு அதிக அளவில் பேருந்து சேவை உள்ளதென்றால் அது தமிழகம் மட்டுமே.

ஒரு காலத்தில் நாலைந்து கிலோமீட்டர் நடந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு வந்தால் மட்டுமே நகருக்கு செல்ல பேருந்துகளை பிடிக்க முடியும் என்றிருந்த நிலைமைக்கு தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுகட்டப்பட்டுவிட்டது..

எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் கணிசமாக மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களுக்கு காலையில் ஒரு நடை, இரவில் ஒரு நடை என இரண்டு முறை டவுன் பஸ்கள் விடப்பட்டன..அப்படி விடப்பட்ட டவுன் பஸ்கள் இன்று ஆறுநடை, ஏழு நடை என்ற அளவுக்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் வாழ்க்கையை பின்னிப்பிணைந்திருக்கும் அந்த பேருந்துகள் ஆரம்பத்தில் மிகமிக மலிவான கட்டணத்தில் இயக்கப்பட்டன.

இன்றும் பத்துபேர் பயணம் செய்ய காத்திருக்கும் அகால வேளையிலும் அரசு பேருந்துகள் மக்கள் சேவைக்காக கிராமப்புறங்களுக்கு சென்று வருகின்றன. இங்கெல்லாம் கொழுத்த வழித்தடங்களில் கிடைக்கும் லாபம்போல் கிடைக்காது.. நஷ்டமே பெரிய அளவில் மிஞ்சும். மலைப்பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்

வசூல் நன்றாக கொழிக்கும் ஒரு வழித்தடத்தில் அரசு பேருந்து எவ்வளவு லாபத்தை சம்பாதித்து கொடுத்தாலும் இதுபோன்ற கிராமப்புற சேவை வகைகளில் லாபம் காணாமல் போய்விடும்.. அப்புறம் லட்சக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச பேருந்து.. அப்புறம் எம்எல்ஏ, தியாகிகள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு பஸ் பாஸ். சலுகை கட்டணத்தில் மாதாந்திர அட்டைகள்… இதற்கெல்லாம் எங்கேபோவது..?

நாட்டுக்கு அனைத்து சேவைகளையும் செய்யவேண்டும்..அதே நேரத்தில் லாபகரமாகவும் செயல்படவேண்டும் என்றால் அது சாத்தியமே படாது. நீதித்துறை காவல்துறை பொதுப்பணித்துறை போன்றவையெல்லாம் வருடத்திற்கு இவ்வளவு லாபம் காட்டியாக வேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? அப்படித்தான் போக்குவரத்து கழகங்களையும் கருதவேண்டும். லாபம் தேவையில்லை..ஆனால் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம்..

பேருந்து கட்டணங்களை குறைக்க போராடுவதோடு நின்றுவிட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது..  முதற்படியாக அரசு போக்குவரத்து கழங்களில் எங்கெங்கே ஊழல், தண்டச்செலவு என்பதை கண்டறிந்து அவற்றை ஒழிக்க குரல் கொடுக்கவேண்டும்..

ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும் ஓட்டுநர், நடத்துனர் போன்ற பணியார்களுக்கு மேலேயும் தலைமைப்பொறுப்பில் உள்ள எம்டிக்கும் இடையே, தேவையே இல்லாமல் ஏகப்பட்ட ஆணிகள் உயர் அதிகாரிகளாய் உலாவந்துகொண்டிருக்கும். அந்த ஆணிகளின் சம்பளம் மலைக்கவைக்கும்.. அவைகளுக்கு ஒரு வாகனம், அதற்கு இரண்டு டிரைவர்கள், அவர்களுக்கு சம்பளம், அப்புறம் மாசத்திற்கு இவ்வளவு டீசல்..

அனுபவம் வாய்ந்த ஒரு தொழில்நுட்ப பணியாளர் இருக்கவேண்டிய இடத்தில் வொயர்லெஸ் டிஎம் என உயர் அதிகாரி உட்கார்ந்துகொண்டு மேலே சொன்ன வாகனங்களில் வலம் வந்துகொண்டு காசை கரியாக்கிக்கொண்டிருப்பார்.

ஒட்டுநர், நடத்துனர், தொழில் நுட்ப பணியாளர்கள், கிளை மேலாளர்கள், நிர்வாக இயக்குநர் இவர்களைத்தவிர எங்கெல்லாம் அதிக சம்பளத்தில் தேவையில்லாமல் சீட்டை தேய்க்கிறார்களோ அவர்களின் பதவிகளை யெல்லாம் ஒழித்தால் பெருமளவு செலவு குறையும்.

இன்னொரு பக்கம் சில தொழிற்சங்கவாதிகளின் அக்கப்போர். அண்மையில் வெளியான தகவல் இது.. மதுரை மண்டலத்தில் ஓட்டுநர், நடத்துனர் பணிக்காக நியமிக்கப்பட்ட 180 பேர், அந்த வேலைகளை செய்யாமல் ஹாயாக இருக்கும்படி வெவ்வேறு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளனர்.. தினமும் இவர்கள் மொத்தமாக இயக்கவேண்டிய தூரம் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் கிலோமீட்டர். ஆண்டுக்கு இவர்களால் மட்டுமே ஏற்படும் நடை இழப்பு, ஒன்பது கோடி ரூபாய் என்கிறது அந்த செய்தி. ஒரு மண்டலத்திற்கே இப்படி.. அப்போது தமிழகம் முழுவதும்?

இன்னொரு பக்கம் அரசின் எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு அதே ஓட்டுநர், இயக்குநர்களுக்கு ஒரு மாபெரும் கொடுமை காலம் காலமாய் நடக்கிறது..

(வெட்கப்படுவதை நாளை தொடர்வோம்..)