தருமபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை கிராமப்பகுதிகளில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 2500 கிராமங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் எளிதாக சென்று சேருவதற்காக மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு உள்ளூர் அளவிலேயே முகாம்களை நடத்தி அங்கு அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இத்திட்டம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 18-ந்தேதி முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததார். இதுவரை மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தி 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை ஊரக பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டம் சென்று தொடங்கி வைத்தார்.
இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.எ திட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன், அங்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே முடிக்கப்பட்ட ரூ. 444.77 கோடி மதிப்பிட்டில் 621 முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்தால் மக்கள் பயனடையும் விதம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசு துறைகள் அடையாளம் காணப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 முகாம்களை நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.