டில்லி:
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனின் படைப்பிரிவினருக்கு சிறப்பு பேட்ஜ்களை வழங்கி விமானப்படை கவுரவித்துள்ளது.
இந்த விமானப்படை விங் கமாண்டரான தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் வர்தமான், பாலகோட் தாக்குதலின்போது, தனது சுகாய் 30எம்கேஐ விமானத்தில் அம்ராம் ஏவுகணை ( AMRAAM missile) மூலம், அமெரிக்கா தயாரித்த, பிரபலமான ‘எஃப்-16’ ரக போர் விமானத்தை தாக்கி அழித்தார்.
எஃப் – 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹிட் மார்டின் தயாரித்து வழங்கியது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த போர் விமானத்தை எளிதில் வீழ்த்த முடியாது.
ஆனால், பிப்., 27ம் தேதி பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய போது அமெரிக்க ஒப்பந்தத்தை மீறி பாக்., எஃப் 16 ரக விமானத்தை பயன்படுத்தியது. அதை அபிநந்தன் அநாயசமாக தாக்கி அழித்தார். இது பாகிஸ்தான் மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து தனது விமானமும் சேதடைந்ததால், பாகிஸ்தானுக்குள் தரையிறங்கிய அபிநந்தன், அங்கு கைது செய்யப்பட்டு 2 நாளில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஓய்வெடுத்து வந்த அபிநந்தன், சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் விமானப் படை தளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
அவரை கவுரப்படுத்தும் வகையில், அவரது படைப்பிரிவுக்கு ‘ராஜாளிகளை வீழ்த்துபவன்’ என்ற பொளுடள் கொண்ட ‘பால்கன் ஸ்லேயர்’ என்ற சிறப்பு பேட்ஜ்களை இந்திய விமானப்படை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
அந்த பேட்ஜில் சிவப்பு நிற எஃப் 16 ரக விமானம் மீது, குறிவைக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. அபிநந்தனின் வீர தீர செயலுக்காக, அவரது படைக்கு இந்த சிறப்பு ‘பேட்ஜ்’ வழங்கியதாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.