சென்னை: நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாவட்டம் வாரியாக நகைக்கடன் குறித்து தணிக்கை செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஏழை மக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நகைக்கடன்களில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது, திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக திமுக தேர்தலின்போது, 5 சவரன் வகை யிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததால், பலர் போலி நகைகளைக்கொண்டும், ஒரே வீட்டைச்சேர்ந்த பலரும் நகைக்கடன் பெற்றுள்ளதும், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்து, நகைக்கடன் தள்ளுபடி பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்தது. இதையடுத்து, நகைக்கடன் பெற்றவர்களின் தகுதியான பயனாளிகளைக் கண்டறியும் வகையில் சங்கங்களின் பெயர், பயனாளியின் பெயர், நகைக்கடன் பெற்ற நாள், கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் உள்பட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 13 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் 43 லட்சம் பேர் காத்திருந்த நிலையில், அரசின் நிபந்தனைகளால் இதுவரை 13 லட்சம் பேர் மட்டுமே நகைக்கடன் பெற்றுள்ளனர். இதனால், அனைத்து மக்களும் பலன் பெறுவதற்கு வாய்ப்பில்லை. இது சர்ச்சையானது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றன. இதையடுத்து, பொது நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, 40 கிராம் வகையிலான (அதாவது 5 சவரன்) நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், அயல் மாவட்ட தண்ணிக்கையாளர்கள் மூலம் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு தற்போது ஆணையிட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், இறுதி தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.