கமதாபாத்

குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்குகள் சரணாலயத்தில் பணி புரியும் ரசிலா வதேர் குறித்த ஒரு சிறு செய்திக் குறிப்பு இதோ

பெண்கள் உடலளவில் பலம் குறைந்தவர்கள் என பொதுவாகக் கூறுவதுண்டு.   இதனால் பல பணிகளில் பெண்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.    ஆனால் ஆணுக்குப் பெண் சமம் என்னும் அடிப்படையில் பெண்களுக்கு அனைத்துப் பணிகளிலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கபப்ட்டுளது.  இவ்வகையில் வனவிலங்குகளுடன் பணிபுரியப் பல பெண்கள் முன்வராத நிலையில் ஒரு பெண் அந்த பணியை மேற்கொண்டு திறம்படச் செய்து வருகிறார்.

குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்குகள் சரணாலயத்தில் வன விலங்குகள் பாதுகாப்புப் பனியில் ஈடுபட்டுள்ள ரசிலா வதேர் என்னும் பெண் தான் அவர். இவர் இதுவரை சுமார் 800க்கும் அதிகமான சிங்கம், சிறுத்தை, முதலை, பாம்புகள் போன்ற பல விலங்குகளைக் காப்பாற்றி இந்தியாவின் சிங்க ராணி என்னும் பெயரைப் பெற்றுள்ளார்.  இவருக்குப் பல விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தனது பணி குறித்து ஒரு பேட்டியில் ரசிலா வதேர், “நான் எனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தேன்.  இதனால் தாயாரையும், சகோதரனையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. நான் ஏற்கெனவே விளையாட்டு பந்தயங்களில் ஈடுபட்டிருந்ததால் நல்ல உடல் தகுதி பெற்றிருந்தேன். கடந்த 2008 – ஆம் ஆண்டில் என்னுடைய சினேகிதி மூலமாக வனவிலங்கு பாதுகாப்பு சேவையில் ஆள் எடுப்பதாக கேள்விப்பட்டு வனத்துறை பணியில் சேர்ந்தேன்.

அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிர் வனத்தில் பெண்களுக்கு வாய்ப்பளித்தார். அது முதன் முதலாக அமைக்கப்பட்ட பெண்கள் வன விலங்கு பாதுகாப்புக் குழு என்பதால் எங்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அத்துடன் இந்தப் பணிக்கு தேவையான மனோதிடம், உடல் வலிமை ஆகியவை பரிசீலனை செய்யப்பட்டன. மொத்தம் 43 பெண்கள் எங்கள் குழுவில் இருந்தனர்.  இந்தப் பணியில் சேர்ந்தபோது கிர் சரணாலயம் பற்றியோ, காட்டு விலங்குகள் பற்றியோ எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. .

நான் பெண்ணாக இருந்தாலும் மன உறுதியுடன் பணியாற்ற வேண்டுமென்று  என்று மட்டும்தான் தீர்மானித்தேன்.  கடந்த 2008 – ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதியன்று முதன்முதலாக முள்ளம் பன்றி முட்கள் குத்திப் பாதிக்கப்பட்டிருந்த பெண் சிங்கத்தின் உடலிலிருந்து முட்களை அகற்ற வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த சிங்கம் மிகவும் நலிவடைந்து இருந்ததால் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்காமல், ஒரு மாட்டைக் கட்டி வைத்துப் பிடிப்பதெனத் தீர்மானித்தோம். எங்கள் எதிர்பார்ப்புக்கு பதிலாக  நல்ல திடமான சிங்கமொன்றும் குட்டியும் வந்து மாட்டை அடித்துத் தின்றன. அவற்றை விரட்ட என்னுடன் இருந்த மூத்த அதிகாரிகள் கொம்புகளைத் தட்டி சத்தமெழுப்பியதால் மிரண்ட சிங்கம் திடீரென என் மீது பாய்ந்ததால் தலையில் காயம் ஏற்பட்டது.

நான் அங்கிருந்து திரும்பினால் அந்தப் பணிக்கு லாயக்கற்றவள் எனக் கருதக் கூடுமென நினைத்து மருத்துவரின் ஆலோசனையை ஏற்க மறுத்து அங்கேயே தங்கினேன்.  அடுத்த நாள் காலை அந்தச் சிங்கத்தைப் பிடித்து கூண்டில் அடைத்த பின்னர் என்னுடைய தன்னம்பிக்கை மேலும் அதிகரித்தது.

வன விலங்குகளைப் பிடித்து, திரும்பவும் வனத்தில் கொண்டுபோய் விடுவது என்பது குறித்து உடனடியாக அந்த இடத்திலேயே முடிவெடுக்க வேண்டும். கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை மீட்க ஒருமுறை ஏணியொன்றை உள்ளே இறக்கினோம். சிறுத்தை கயிற்றைக் கடிக்கத் தொடங்கியதால் சிறுத்தையை மீட்க 3 மணி நேரம் போராடினோம்.

என்னுடைய பணியில் நேரம் காலமே கிடையாது.  எப்போது வேண்டுமானாலும் பொது மக்களிடமிருந்து அழைப்புகள் வரலாம்.  24 மணி நேரமும் ஊருக்குள் சிறுத்தைப் புகுந்து விட்டதென்றோ, வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதென்றோ அழைப்புகள் வரும்.  அவை மனிதர்களைத் தாக்காத வகையில் பாதுகாப்பாகப் பிடித்து மீண்டும் காட்டுக்குள் கொண்டுபோய் விடுவது சாதாரண பணி அல்ல.

முக்கியமாக அவைகளைப் பிடிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, வேடிக்கை பார்க்க வரும் ஜனக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான் பெரும் பிரச்சினை ஆகும்.

எங்கள் பணி மிருகங்களை மீட்பது மட்டுமல்ல. அவற்றை மீட்கும்போது அவைகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு மருந்திட்டு சிகிச்சையளிப்பதும் எங்கள் கடமையாகும். மீண்டும் அவற்றைக் காட்டுக்குள் கொண்டுபோய் விடுவது மிகவும் ரிஸ்க்கான வேலையாகும்.

தற்போது சுற்றுலா ஸ்தலமாக  விளங்கும் கிர் சரணாலயம், ஒரு காலத்தில் இந்திய மன்னர்களின் வேட்டைக் காடாக விளங்கியது. இப்போது ஆசியச் சிங்கங்களின் சரணாலயமாக மட்டுமின்றி சிறுத்தைகள், பல்வேறு மிருகங்கள், பறவைகள், அபூர்வமான பூச்சிகள், ஊர்வன போன்றவற்றுக்கு வசிப்பிடமாகவும் விளங்குகிறது ”  எனத் தெரிவித்துள்ளார்.