சென்னை: சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா விவாதத்தில், ஓபிஎஸ்-ஐ சபாநாயகர் அப்பாவு பேச அழைத்த நிலையில், அவர்  `அதிமுக’ எனக் குறிப்பிட்டு பேசினார். இதற்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடு பட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முன்னதாக இது தொடர்பாகப் பேச கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். இதையடுத்து மீண்டும் அதிமுக சார்பில் பேச ஓபிஎஸ்-க்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மசோதாவுக்கு ஆதரவு” எனத் தெரிவித்தார்.

இதை எதிர்த்து அ.தி.மு.க-வினர் கோஷமிட்டனர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், “ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசிய பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்… இது திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுவதுபோல் உள்ளது” என அமளியில் ஈடுபட்டனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “உங்கள் விவகாரத்தை நாங்கள் பேசவில்லை. அது எங்களின் நோக்கமல்ல. இது முக்கியமான மசோதா என்பதால், ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு கருத்துச் சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்குத் தவறான வாதங்களைக் கற்பிக்க வேண்டாம்” என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை, `எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என நான் குறிப்பிடவில்லை. மாண்புமிகு உறுப்பினர் என்றுதான் குறிப்பிட்டேன்’ என அவைத்தலைவர் விளக்கமளித்தார். எனினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.