சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டமானது ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டம் முடிவடைந்த நிலையில், அடுத்த நாள், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கட்சித் தரப்பிலிருந்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இந்த நிகழ்வும் நேரலை ஒளிப்பரப்பானது.
இந்தக் கூட்டத்தொடரில், டிஎன்பிஎஸ்சி சட்டத் திருத்த மசோதா, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு அறிவித்தார்.