ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் இருந்தும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து நேற்று அறிவித்த ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியதோடு வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் தனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை இன்று காலை மக்களவை செயலகத்தில் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், இவரது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

17வது மக்களவையை கலைத்து பிரதமர் மோடி அளித்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட நிலையில் 18வது மக்களவைக்கு உறுப்பினர்கள் தற்போது தான் தேர்வான நிலையில் ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக வெளியான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.