தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை மீட்பதற்காக நேற்று பூமியில் இருந்து புறப்பட்ட SpaceX விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய்யத்துடன் இன்று இணைந்தது.
முன்னதாக ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 5ம் தேதி ISSக்கு பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
ஜூன் 13ம் தேதி பூமி திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி ஆய்வு மையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்க நாசா தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட நிலையில் எலோன் மஸ்க் நிறுவிய தனியார் நிறுவனமான SpaceX ஆல் இயக்கப்படும் டிராகன் விண்கலத்தின் உதவியுடன் விண்வெளி வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாசாவின் SpaceX Crew-9 மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையில் நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஹெலீன் சூறாவளி காரணமாக SpaceX Crew-9 புறப்படுவதில் தாமதமான நிலையில் புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று சென்றடைந்த இந்த விண்கலம் ISS உடன் இணைக்கப்பட்டது.
அதேவேளையில் 8 நாள் பயணமாக விண்ணுக்கு சென்று ஆய்வு மைய்யத்தில் சிக்கிக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வேறு சில ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் தற்போது பூமிக்கு திரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் தங்கள் ஆய்வுகளை முடித்து விட்டு ஹேக் மற்றும் கோர்புனோவ் ஆகியோருடன் பிப்ரவரி 2025 இல் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.