லிஃபோர்னியா

மெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று ஒரே நேரத்தில் 143  செயற்கைக் கோள்களை நிறுவி உலக சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஆகும். இந்நிறுவனத்தை நிறுவியவர் எலான் மஸ்க் ஆவார்.  இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று தனது டெஸ்லா நிறுவனத்தின் மூலம் இந்தியச் சந்தையில் நுழைந்துள்ளார்.   இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சோதனைகளில்  பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.

கடந்த வருடம் ஜூன் மாதம் இந்நிறுவனம் நாசாவுடன் இணைந்து இரு விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது.  இந்நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்னும் ராக்கெட்டின் மூலம் இந்த இரு விண்வெளி வீரர்களும் பயணம் செய்தனர்.  இதன் மூலம் முதல் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்னும் புகழை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றது.

நேற்று இந்த நிறுவனம் மற்றொரு சாதனை புரிந்துள்ளது.  இந்நிறுவனம் தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக நிறுவி உள்ளது.  இந்த 143 செயற்கைக் கோள்களில் அரசின் செயற்கைக் கோள்களும் அடங்கும்.  இதுவரை அதிக அளவில் ஒரே நேரத்தில் செயற்கைக் கோள் நிறுவப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை நிறுவி இருந்தது.  தற்போது ஸ்பேஸ் எக்ஸ் அந்த சாதனையை 143 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் நிறுவி முறியடித்துள்ளது.

நேற்று இந்திய நேரப்படி இரவு 8.31 மணிக்குச் செலுத்தப்பட்ட இந்த ஃபால்கன் ராக்கெட் இந்தியாவைக் கடந்த போது அதன் சிக்னல்கள் பெஙளூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு நிலையத்தில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.