சென்னை: நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் ஒரு மழைக்காலமாகும். இந்த பருவமழை இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவில் மழையை கொண்டுவருகிறது.  ஆனால், இந்த ஆண்டு  முன்கூட்டியே, அதாவது மே மாதம் 2வது வார இறுதியில் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

இதன் காரணமாக, இந்தாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்தியாவில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெப்பம் தலைத்தூக்கி காணப்படும். தமிழ்நாட்டில் கூட தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கோடை வெயில் காலத்தில் ஆறுதல் தரும் விதமான செய்தி ஒன்றை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை வரும் மே 13ஆம் தேதி அன்றே இந்தியாவின் வங்கக்கடல் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிக்கு வந்து தொடங்கி விடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும். இந்நிலையில், தற்போது 10-15 நாள்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இம்மாதமே மெல்ல கோடை வெயிலின் தாக்கம் தணியத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மழைக்கு ஆதாரமாக தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டும் உள்ளன. இதில் தென்மேற்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு குறைவான மழையே கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பின் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழ்நாட்டிற்கு அதிக மழைப் பொழிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.