சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்பந்தம் கோரி உள்ளது. இந்த ரயில் நிலையம் ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் விரைவில் திறக்கப்படவுள்ளது. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய முடிவு செய்துள்ள தமிழ்நாடு, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரெயில் நிலையம் அமைக்க ரயில்வேயிடம் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்த நிலையம், இந்த நிலையில், வண்டலூர் – கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளதால், நகர்ப் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இதனால், ஜிஎஸ்டி சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. புறநகர் ரெயில்கள் நின்றுசெல்லும் வகையில் மூன்று நடைமேடைகளுடன் ரெயில் நிலையமானது அமைய உள்ளது. புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம்!