சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்.
நாட்டுக்கு அதிக அளவில் மழையை அளிப்பது து தென் மேற்கு பருவமழைதான். நான்கு மாதங்கள் நீடிக்கும் இது, பொதுவாக ஜூன் முதல்வரம் கேரளாவில் துவங்கும்.
படிப்படியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பருவமழை பரவும்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை அடுத்த வாரத்தின் (ஜூன் 2ம் வாரம்) ஆரம்பத்தில் கேரளாவில் துவங்க இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா இன்று தெரிவித்தார்.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும், படிப்படியாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறையும் என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக ஊத்தங்கரை மற்றும் தருமபுரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் ஸ்டெல்லா தெரிவித்தார்.