சென்னை: தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் முதல் வட கேரளா வரை வளி மண்டலத்தில் 1 கி.மீ உயரத்துக்கு நிலவும் காற்றின் சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும். மார்ச் 13, 14 தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராதாபுரம் 4, தூத்துக்குடி, கொட்டாரம் தலா 4 செ.மீ., நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம், நாகர்கோவில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.