சியோல்: வேகமாக உண்டு பழகி, பயணத்தை தனியாக மேற்கொண்டு, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள் என்று தனது நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது தென்கொரிய அரசு.
இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: இனிவரும் காலங்களில், கொரோனா தாக்குதலுக்கு முந்தைய வாழ்க்கைக்கு திரும்பிச்செல்ல முடியாது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். வழக்கமான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.
மேலும், சில வல்லுநர்கள் கொரோனா பாதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடும் என கணித்துள்ளனர். இதனையடுத்து, அரசு பொதுவான விதிகளை வகுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதன்படி மக்கள் அனைவரும் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் போன்றவற்றில் குறைந்த நேரத்தை மட்டுமே செலவிட வேண்டும்.
உணவை உண்பதற்கு தனிப்பட்ட தட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அது மட்டுமல்லாது, சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய வேண்டும். வாடகை கார்களை பயன்படுத்துவோர் மொபைல் வழியாக கட்டணத்தைத் செலுத்த வேண்டும்.
தனியார் பள்ளிகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களில் கை சுத்திகரிப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகளை வரும் நாட்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.