மானேசர், அரியானா,
தென் கொரியா நிறுவனமான எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனம் அரியானா மாநிலத்தில் கொரோனா துரித சோதனை கருவி உற்பத்தியைத் தொடங்கி உள்ளது.
கொரோனா வேகமாகப் பரவி வருவதால் இந்தியா சோதனைகளை அதிகரித்து வருகிறது. இந்த சோதனைகளின் முடிவுகளை விரைவில் அறிந்துக் கொள்ள வசதியாக இந்திய அரசு சீனாவிடம் இருந்து துரித சோதனை கருவிகளை இறக்குமதி செய்தது. இந்தியாவுக்காகச் செய்யப்பட்ட இந்தக் கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
இந்தக் கருவிகளின் சோதனை முடிவுகளில் மிக அதிகமான அளவில் தவறுகள் காணப்பட்டன இதையொட்டி பல மாநிலங்களில் துரித சோதனை நிறுத்தப்பட்டது. இந்திய மருத்துவ ஆய்வுக் குழு சீன துரித சேவை கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவித்தது. இதையொட்டி தென் கொரியாவில் இருந்து துரித சோதனைக் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டன.
இந்த கருவிகளை விற்பனை செய்யும் எஸ்டி பயோசென்சார் ஹெல்த் கேர் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை அரியானாவில் மானேசர் என்னும் இடத்தில் உள்ளது. அங்கு துரித சோதனைக் கருவி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தயாராகும் சோதனைக் கருவிகள் முதலில் சத்தீஸ்கர் அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த உற்பத்தி கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
இதற்காக இந்த நிறுவனத்துக்கு உற்பத்தி செய்யும் உரிமம் மிகக் குறைந்த காலத்தில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கருவிகள் இந்தியா, தென் கொரியாவுக்கு மட்டுமின்றி உலக அளவில் அதிகத் தேவை உள்ளதால் விரைவில் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் திறமையான தொழிலாளர்கள், மற்றும் மலிவான விலையில் பொருட்கள் கிடைப்பதால் இங்கு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.