சியோல்:
தென்கொரியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்ற நம்பிக்கை தரும் தகவல் கிடைத்துள்ளது.
தென்கொரியாவில் நேற்று 6 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று குறைந்து வருவதாகவும், விரைவில் பூஜ்ஜியத்தை எட்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றை மக்கள் முழுவதுமாகத் தவிர்க்க, கரோனா வைரஸ் பாதிப்புக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கையை வாழுமாறு தென்கொரிய மக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. பயணங்களைத் தனியாக மேற்கொள்ளுமாறும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்கொரியாவின் துணை சுகாதாரத் துறை அமைச்சர் கிம் கூறும்போது, “சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் இரண்டு வருடம் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளனர். நாம் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணமாக அந்நாட்டு அரசு ஊரடங்கை நீட்டிக்காமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மக்களைத் தொடர்ந்து அறிவுறுத்தியது. இதன் விளைவாக அங்கு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்கொரியாவில் இதுவரை 10,708 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 240 பேர் பலியாகியுள்ளனர்.