சியோல்

ட கொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளன.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. வட கொரியா அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறித் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டிய வடகொரிய அரசு, தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

வட கொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுக் கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின. இந்த முத்தரப்பு ஒத்திகை தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான சர்வதேச கடற்பரப்பில் நடத்தப்பட்டது.

தென்கொரியா கடற்படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து, “விரைவில் வடகொரிய நாட்டின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எங்கள் ராணுவத்தின் வலுவான பதில் அமைப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்புடன் திறம்படப் பதிலளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.