லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க பெண்கள் அணி.
இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், துவக்க வீராங்கனை ஷஃபாலி வெரமா 31 பந்துகளில் 47 ரன்களையும், ரிச்சா கோஷ் 26 பந்துகளில் 44 ரன்களையும் அடித்தனர். தியோல் 31 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இறுதியில், 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 158 ரன்களை எடுத்தது.
பின்னர், சுமாரான இலக்கை நோக்கிய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், துவக்க வீராங்கனை லீ, 45 பந்துகளில் 70 ரன்களை அடித்து வெற்றிக்கு பெரிய அடித்தளமிட்டார். லாரா 39 பந்துகளில் 53 ரன்களை அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.
சரியாக 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 159 ரன்களை அடித்து 6 விக்கெட்டுகளில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது தென்னாப்பிரிக்க பெண்கள் அணி.