ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. நேற்றும்கூட அதிக ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடைகள் ஏற்படாமல் இருந்திருந்தால், இந்திய அணி 600 ரன்களைக் கடந்திருக்கும்.
ஆட்டம் முடிக்கப்படுவதற்கு 5 ஓவர்களே மிச்சமிருந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷமியும், உமேஷ் யாதவும் தலா 1 ஓவர்கள் மட்டுமே வீசி, ஆளுக்கு ஒரு விக்கெட் எடுத்தனர்.
டீன் எல்கர் மற்றும் குவின்டன் டீ காக் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்துவிட்டது.
இன்றைய நாளில் எப்படியும் பேட்டிங்கை தவிர்க்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா முயன்றபோதும், கேப்டன் கோலி சுதாரித்து, அந்த அணியை பேட்டிங் செய்ய வைத்து, இரண்டாம் நாளின் முடிவுக்குள் 2 விக்கெட்டுகளை காலிசெய்து விட்டார்.
இன்னும் 3 ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களே வீசியிருந்தால், மேலும் சில விக்கெட்டுகள் போயிருக்கலாம். ஆனால், வெளிச்சமின்மை காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.