அரியலூர்: மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீடு தேடிச்சென்று சந்தித்து பேசியது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத்தலைவருமான காடுவெட்டி குரு, நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சுமார் நான்கு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 2018ம் ஆண்டு மே 25ந்தேதி மரணமடைந்தார். குருவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும், அதற்கு ராமதாஸ் உடன்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தை கடுமையாக எதிர்த்த காடுவெட்டி குடும்பத்தினர், காடு வெட்டி குருவின் தீவிர விசுவாசியான விஜிகே மணி ‘மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க அமைப்பு’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி பாமகவுக்கு எதிராக அணி திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்கிற பெயரில் புதிய அமைப்பை, குருவின் 59-வது பிறந்த நாளின்போது தொடங்கி உள்ளார். அதைத்தொடர்ந்து வன்னிய இளைஞர்களிடையே பாமகவுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். வன்னியர் பெல்ட் எனப்படும், அரியலூர், கடலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில், காடுவெட்டி குருவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவர்கள் அனைவரும் காடுவெட்டி குருவின் மகனான கனலரசன் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
இதன் காரணமாக வன்னியர்களின் வாக்கு பாமகவுக்கு முழுமையாக கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில், திமுக இளைஞர்அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று, மாவீரன் மஞ்சள் படை தலைவர் கனலரசனை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். வீடு தேடி வந்த உதயநிதிக்கு குருவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்களின் நலன் விசாரித்த உதயநிதி, தொடர்ந்து கனலரசனையும் சந்தித்து பேசினார். இருவரும் அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, மாவட்ட திமுக கழக செயலாளர் எஸ்எஸ்.சிவசங்கர் உடனிருந்தார். கனலரசன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.