இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த நிலையில் “கங்குலி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, அவர் மீது திணிக்கப்படும் அரசியல் நிர்ப்பந்தமே காரணம்” என கங்குலியின் நண்பரும், மே.வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான அசோக் பட்டாச்சார்யா திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
“தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக கங்குலியை அரசியலில் சேருமாறு சிலர் நிர்ப்பந்தம் செய்தனர். இதனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது” என தெரிவித்த அசோக் பட்டாச்சார்யா “கங்குலிக்கு அரசியல் சரிப்பட்டு வராது” என்றார்.
“இதனை நான் அவரிடம் நேரில் சொன்னேன். எனது கருத்துக்கு கங்குலி மறுப்பேதும் சொல்லவில்லை” என அசோக் மேலும் குறிப்பிட்டார்.
மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், கங்குலி, பா.ஜ.க,வில் சேரப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி