டில்லி:

சிறந்த கிரிக்கெட் வீரராக டோனி விளங்குவதற்கு கங்குலியும், டிராவிடும் தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் கூறினார்.

வீரேந்திர சேவாக் ஒரு டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ அந்த சமயத்தில் இ ந்திய அணியின் பேட்டிங் வரிசையை ஆய்வு செய்த காலம். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் பார்ட்னர் ஷிப் சிறப்பாக அமைந்துவிட்டால் ஆட்டம் நன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. கங்குலி அப்போது 3வது ஆட்டக்காரராக களம் இறங்கி வந்தார்.

ரன் எண்ணிக்கையை உயர்த்த இர்பான் பதன் அல்லது டோனி போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் 4 ஆட்டங்களில் டோனிக்கு தனது 3ம் இடத்தை கங்குலி விட்டுக் கொடுத்தார்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘கங்குலி போன்ற ஒரு சில கேபடன்கள் மட்டுமே தனது இடத்தை எனக்கும், டோனிக்கும் விட்டுக் கொடுப்பார்கள். அதை கங்குலி செய்தார். இதன் காரணமாகவே டோனி தற்போது சிறந்த வீரராக திகழ்கிறார். புதிய ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் கங்குலி அதிக நம்பிக்கை கொண்டவர்.

ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தபோது ஆட்டத்தை முடித்து வைக்கும் வீரராக டோனி திகழ்ந்தார். இரண்டு முறை விளையாடிய போது டோனி தவறான ஷாட்களை வெளிப்படுத்தினார். இதை டிராவிட் பின்னர் சுட்டி க்காட்டினார். அதன் பிறகு டோனி தனது செயல்பாட்டை மாற்றிக் கொண்டு ஆட்டத்தை முடித்து வைக்கும் சிறந்த வீரராக திகழ்ந்தார். டோனியும் யுவராஜ் சிங் பார்ட்னர் ஷிப் நினைவில் நிற்க கூடியதாகும்’’ என்றார்.

2004ம் ஆண்டில் கங்குலி கேப்டனாக இருந்த சமயத்தில் டோனி இந்தியாவுக்கு தனது சிறந்த பங்களிப்பை அளித்தார். 3வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள், இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.