சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது.

மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம்.

ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.


திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம். ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பிடமும், கொடி மரமும் உள்ளன.

அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜப் பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர்.

அம் மண்டபத்தில் சௌந்தரராஜப் பெருமாள் ரெங்கநாதனாக கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். இச்சன்னதியில் அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கல சிலையில் நரசிம்மரின் ஒரு கை ப்ரஹலாதனின் தலையை தொட்டும் இன்னொரு கை அபய ஹஸ்தமாகவும் விளங்குகிறது.


மற்ற கைகள் ஹிரண்ய வாதம் செய்கின்றது. அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.

ஆண்டாள் சன்னதிக்குமுன்பாக கொடி மரம் உள்ளது. இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.