சென்னை
தமிழகத்தில் மிக விரைவில் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மத்திய அரசு இந்திய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கத் தீவிரமாக இயங்கி வருகிறது. இந்திய ரயில்வே துறையிலும் தனியாரைக் கொண்டு வருவதில் அரசு தீவிரமாக உள்ளது. இந்திய ரயில்வே துறை உலகின் மிகப் பெரிய அரசுத் துறைகளில் ஒன்றாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு 50 ரயில் நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கவும் 150 வழித்தடங்களைத் தனியாருக்கு விற்கவும் முடிவு செய்தது.
இந்த தடங்களில் 2023 முதல் தனியார் ரயில்கள் முழுவதுமாக இயங்கும் எனவும் அவை மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசு இதில் முதலீடு செய்யத் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் ரயில்வே துறை முழுவதுமாக தனியார் மயமாகாது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
தமிழகத்தில் 9 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க முடிவு செய்த ரயில்வே துறை சென்னையில் இருந்து பிற நகரங்களை இணைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளது. தனியார் ரயில்கள் சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, குமரி, நெல்லை ஆகிய தமிழக நகரங்களுக்கும் வெளி மாநிலங்களிலும் மும்பை, மங்களூரு, செகந்திராபாத், டில்லி போன்ற வெளி மாநில நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
தென்னக ரயில்வே இதற்காக ரூ.3,221 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் 1,052 கிமீ தூரம் செயல்பட உள்ளது. இதற்கான தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த தனியார் ரயில்களுக்கு முனையமாக தாம்பரம் மற்றும் பராமரிப்பு மையமாக தண்டையார்பேட்டையும் செயல்பட உள்ளது.
[youtube-feed feed=1]