டில்லி
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை உடனடியாக தொடங்கலாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி கடுமையாகத் தாக்கியது. இந்த பாதிப்புக்கள் குறையும் வேளையில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் நாடு மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவப் படுக்கைகள் பற்றாக்குறை எனப் பல துயரங்களை இந்தியா சந்தித்தது.
கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதையொட்டி இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளும் தளர்வுகளை அறிவித்தன. சமீபகாலமாக மேலும் பாதிப்பு குறைவதால் மேலும் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்திய மருத்துவ சங்கம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ’தற்போது வழிப்பாட்டு தளங்கள், சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் வேகமாக ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. சர்வதேச அளவில் தொற்று குறித்து நமக்குக் கிடைக்கும் சான்றுகளை வைத்துப் பார்த்தால், மூன்றாவது அலை இன்றியமையாததாகும். குறிப்பாகக் கூட்டமாக மக்கள் கூடும் சந்தர்ப்பங்கள்தான் கொரோனா 3 ஆம் அலையின் ஆரம்பப் புள்ளி ஆகும்’என எச்சரித்துள்ளது.