சென்னை

விரைவில் தாம் வந்து கட்சியைச்  சரி செய்து விடுவதாக சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஒரு செய்து வெளி வந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  கடந்த ஜனவரி மாதம் இவர் தண்டனை முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டார்.  அதையொட்டி தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நேரிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கப் போவதில்லை என அறிவித்தனர்.   சசிகலாவின் நெருங்கிய உறவினர் டிடிவி தினகரன் ஏற்கனவே அமமுக கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தாம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அப்போது சசிகலா அறிவித்தார்.

தற்போது கட்சித் தொண்டர் ஒருவர் சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அதில் சசிகலா, ”சீக்கிரம் நான் வந்துவிடுவேன்,  கவலை வேண்டாம்.  கட்சியைக் கண்டிப்பாகச் சரி செய்து விடலாம்.  கொரோனா முடிந்த உடன் நான் வருகிறேன்.  நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அதிமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாகி உள்ளது.  இந்நிலையில் சசிகலா உரையாடியதாக வெளிவந்த இந்த ஆடியோ செய்து தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக தலைவர்கள் இடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.