டில்லி

வி  ரைவில் தடையில்லா சுங்க வசூல் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் தனது பேட்டியில்,

”ஃபாஸ்ட் டேக் முறை அறிமுகத்தால் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது. இதை 30 வினாடிகளுக்குக் கீழே குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  எனவே, தடையில்லாத சுங்க வசூல் முறையை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் அரை நிமிடம்கூட காத்திருக்கத் தேவையிருக்காத நிலை ஏற்படும்.    தற்போது தடையில்லாத சுங்க வசூல் முறை டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. 

இது செயற்கைக்கோள் மற்றும் கேமரா அடிப்படையில் செயல்படும்.  ஒரு பயணியின் வாகனம், நெடுஞ்சாலையில் நுழைந்ததுமே அதன் பதிவெண், அங்குள்ள கேமராவால் ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, தகவல் தொகுக்கப்படும். அந்த வாகனம் எத்தனை கி.மீ. பயணித்துள்ளதோ, அந்த தூரத்துக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.

இதனால், சுங்க கட்டண வசூல் திறன் அதிகரிக்கும், வாகனங்களின் பயண நேரம் குறையும்.  முதலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால், விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இது போன்ற நவீன முறைகளை தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போதைய அரசு ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம் காரணமாகவே செயல்படுத்த முடிகிறது. சுங்கச்சாவடிகளில் தொலைத் தொடர்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, தரவுகளை பராமரிக்க இயலுகிறது”

என்று கூறினார்.