டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள்? என்பதை கூட சிபிஐ, அமலாக்க துறையினரால் தற்போது வரை கண்டறிய முடியவில்லை.

இச்சம்பத்தை தொடர்ந்து வங்கிகள் வழங்கிய கடன்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. கடன் பெற்று ஏமாற்றுபவர்களின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வங்கிகளுக்கு புதிய உத்தரவுகளை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இத குறித்து பெயர் வெளியிட விரும்பாத நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நபர்கள் உண்மையிலேயே செலுத்த இயலாதவர்களா? அல்லது ஏமாற்றும் வகையில் செயல்படுகின்றனரா? என்பதை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு கடனை திருப்பி செலுத்தாதவர்களின் விபரங்களை பகிரங்கமாக வெளியிடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகளின் பெரிய கிளைகளில் கடனை திருப்பி செலுத்தாதவர்களை கண்காணிக்க சொத்து நிர்வாக வாகனம் அமைக்க நிதியமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதில் 4 முதல் 5 வங்கி அதிகாரிகள் இடம்பெறுவர். கடன் செலுத்தாத நபர்களை இவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருவார்கள்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த கிளைகள் நவீன தொழில்நுட்பம் மூலம் தரவு புள்ளிகளுடன் இணைக்கப்படும். வங்கிகள் மேலும் 2 துறைகளை புதிதாக உருவாக்க வேண்டும். இதில் ஒன்று கடன் வழங்குவதற்கு முன்பும், மற்றொன்றுரு கடன் வழங்கியதற்கு பின்னரும் செயல்பட வேண்டும். வங்கிகள் வழக்கமாக பெரிய மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கடன் பெறுவோருக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்கும். இது இனிமேல் நிறுத்தப்படும்’’ என்றார்..

முன்னதாக ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களின் பாஸ்போர்ட் விபரங்களை பெற அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.